தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, September 15, 2010

Majority and Minority

பெரும்பான்மையும்! சிறுபான்மையும்!
-க.ராஜ்குமார்

நன்றி தீக்கதிர் -14-09-10

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி யார் போராடினாலும் அவர்கள் ஒரு சிறுபான்மையினர் என்பதும், அப்பகுதியிலிருந்து, போராட்டத்தில் முழுமையாக ஊழியர்கள் பங்கேற்கவில்லை என்று சொல்வதும் அரசின் வாடிக்கையாகிவிட்டது.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஒரு சிறு பகுதியினரே ஈடுபட்டனர் என்று சொன்ன அரசு, போராட்டம் முடிந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அங்கன்வாடி ஊழியர்கள் போராடினாலும், சத்துணவு ஊழியர்கள் போராடினாலும், போராடுபவர்கள் ஒரு சிறுபான்மையினர் என்றே தமிழக அரசு திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றது. போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதை போன்று சித்தரிக்க அரசு முயல்கிறது. இது உண்மையா?

சென்ற ஆண்டு இலங்கை பிரச்சனைக்காக முதலமைச்சர் அவர்கள் ஒரு நாள் திடீரென்று சென்னை கடற்கரை சாலையில், உழைப்பாளர் சிலை அருகே, உண்ணாவிரதம் மேற்கொண்டார். யாருக்கும் தெரியாமல் அவர் ஒருவர் மட்டும் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்ட சில மணி நேரத்தில், தமிழக அரசின் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும், அவரின் தோழமைக் கட்சி தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முதல்வரின் குடும்பத்தாரும் என அந்த இடத்தில் ஆயிரக்கணக் கானோர் வந்து குவிந்தனர். கடற்கரை சாலை போக்குவரத்து பாதித்தது. காவல்துறை அனுமதி தராத இந்த போராட்டத்திற்கு, பல்லாயிரக்கணக்கான காவலர்களை குவித்து, காவல் துறை பாதுகாப்பு வழங்கியது. முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் வேறு யாரும் இன்றளவும் உண்ணாவிரதம் இருக்க சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதி பெறமுடியாது என்பது கவனிக்கதக்கது. இந்த ஒரு சில மணி நேர உண்ணாவிரதத்தின்போது தமிழக அரசின் நிர்வாகமே ஸ்தம்பித்தது என்பது யாவரும் அறிந்ததே.

தனி மனிதர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு ஒரு நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடிந்துள்ளது என்றால், ஒரு சில ஆயிரம் ஊழியர்கள் மேற்கொள்ளும் போராட்டம் அவர்கள் சார்ந்துள்ள பகுதியிலுள்ள பல்லாயிரக் கணக்கானோரின் உணர்வுகளை ஏன் பிரதிபலிக்காது?

மக்களின் பிரச்சனைகளை, அவர்கள் சார்ந்துள்ள அமைப்பு முன் எடுத்து வைப்பதும், அதற்காக அதில் ஒரு பகுதியினர் போராடுவதும் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். ஒரு சிலர், பலரை பிரதிநிதித்துவப்படுத்தி போராடுவது போராட்டமாகும். சமீபத்தில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒரு சில மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டும் அரசு நடவடிக்கை எடுத்து பணி நீக்கமும், தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு துணியவில்லை. அப்படி எடுத்தால் என்ன நடக்கும் என்பதை முதல்வர் நன்கறிந்தவர். ஒரு சோற்றுபானைக்கு ஒரு சோறு பதம் என்ற முதுமொழியை அறியாதவரா முதல்வர்?

சமீபத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் சில நூறு பேரை அமர வைத்து, அரசு அலுவலர் ஒன்றியத்தின் நன்றி (!) அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொண்டு மகிழ்ந்தாரே! அதனால்தான் அவருக்கு எது மெஜாரிட்டி, எது மைனாரிட்டி என்பது தெரியாமல் போனதோ ?

ஆறுகோடிக்கும் மேல் மக்கள் தொகையுள்ள தமிழ்நாட்டில் சுமார் 4 கோடி வாக்காள பெருமக்கள் இருப்பதும், இதில் சுமார் 50 விழுக்காடே தேர்தலில் பதிவு செய்வதும் அதில் ஆளுங்கட்சி அணி சுமார் 30 விழுக்காடு பெற்று ஆட்சி அமைப்பதும் பெரும்பான்மை என்று அல்லவா சொல்லப்படுகிறது? அதுவும் தற்போது ஒரு கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால்தானே கோலோச்ச முடிகிறது.நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த பெரும்பான்மை போராட்டக் களத்திற்கு ஒத்துவராதோ?

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆளும் கட்சியின் கூட்டணி 18க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சிறுபான்மை அரசுஊழியர்களின் அஞ்சல் வாக்குகளை பெற்றுத்தான் வெற்றி பெற முடிந்தது என்பது உண்மைதானே?வரலாற்றுப் புத்தகத்தை புரட்டிப்பார்த்தால் பெரும்பான்மை மக்கள் எப்போதும் பார்வையாளர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பதும், தக்க தருணத்தில் அவர்கள் செயல்பட்டு சரியான முடிவினை உரிய காலத்தில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையும் தெளிவாக அறியமுடிகிறது. இன்று நடைபெற்று வரும் இந்த போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தும் என்றால், காலம் அதற்கு சரியான பாடத்தை புகட்டும்.