தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, June 30, 2010

பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் ஏன் ?

விலை உயர்வும்! விளம்பரம் சொல்லும் உண்மையும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 30-06-10

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், கடந்த 25.06.2010 அன்று கூடிய அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், மண்ணெண் ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 எனவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 எனவும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இனி பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளவும்; தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தனியார் கையில் போய் சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தபோது நினைத்தவாறு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்துவிட்டது.


பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வினை தொடர்ந்து, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் அண்டை நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையுடன் இந்திய நாட்டில் (தில்லி) உள்ள விலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய விளம்பரம் வெளியிடுவது மத்திய அரசில் இதுவே முதல் முறை என்றாலும், தமிழ்நாட்டில் இது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும். போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துகின்ற நேரங்களில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகும். மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ள விளம்பரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எரிபொருள்களின் விலை விபரம் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்று சொல்லவருகிறது மத்திய அரசு. இ;ந்த விளம்பரத்தில் கியாஸ் சிலின்டர் ஒன்றிற்கு அரசு ரூ.225 மானியமும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12-ம் மானியமும் வழங்குவதாகவும் இதனால் ஆண்டொன்றிற்கு மத்திய அரசிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என கணக்கு காட்டியுள்ளது. இந்திய நாட்டில் 11 கோடியே 50 லட்சம் குடும்பங் கள் சமையல் எரிவாயுவினை பயன் படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் 94 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் ஏழை-எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விபரங்களும் அதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .
இந்திய நாட்டின் ஜனத்தொகையில் 50 விழுக்காடு மக்களுக்கு ஆண்டொன்றிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குவதை சுமையாக விளம்பரப்படுத்தியுள்ள மத்திய அரசு, சென்ற ஆண்டு ஒரே ஒரு நபருக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இதே அளவு தொகையை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. அம்பானி குடும்பத்தினரை காப்பாற்ற துடிக்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களை சுமையாக கருதுவது ஏன்?மத்திய அரசு, சுட்டிக்காட்டியுள்ள நாடுகளின் எண்ணெய் சந்தையுடன் இந்திய நாட்டு எண்ணெய் சந்தையை ஒப்பிட்டு நோக்கினால், அந்நாடுகளின் ஒட்டுமொத்த சந்தையை காட்டிலும் இந்திய எண்ணெய் சந்தை மிகப்பெரியது. மேலும் இந்த நான்கு நாடுகளிலும் உள்நாட்டு பிரச்சனைகளால் ஒரு நிலையற்றத்தன்மை நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாடுகளுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க மத்திய அரசு முனைவது விந்தையானது.
கூட்டணிக் கட்சிகளின் கடமை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகள், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விலை உயர்வு முடிவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முடிவாக இருந்தாலும் அவைகளை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதரிப்பதும், இந்த முடிவுகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், மத்திய அரசிற்கு முடிவினை மறுபரிசீலனை செய்ய கடிதம் எழுதுவதும் விந்தையானது. இக்கட்சிகள் மேற்கொண்டு வரும் இரட்டை நிலைபாட்டினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது உடனடி வேலையாகும். தற்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கு அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த குரலில் ஒப்புதல் தந்துள்ளனர். தமிழக முதல்வரோ பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பற்றி குறிப்பிடுகையில், தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களை முழுமையாக புறக்கணிக்காமல், உத்தேசித்திருந்த விலை உயர்வைவிட ஓரளவு குறைத்தே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆறுதல் கூறியுள்ளார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விலை ஏற்றத்தில் ஒரு ஆதாயமும் உண்டு. எரிபொருள்களின் மீது மாநில அரசுகள் விதித்துவரும் வரி வருமானம் உயரவும் செய்வதால், இந்த கட்சிகள் எரிபொருள்களின் விலை ஏறும்போது கண்டும் காணாமல் இருக்கின்றன. கடந்த முறை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் தடுத்துவந்தனர் என்பதை மக்கள் அறிவர். ஆனால் இன்றோ பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த இனி அமைச்சரவைக் குழுக் கூட கூட வேண்டியதில்லை. எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களே விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கிவிட்டது.

Friday, June 25, 2010

மே தின வரலாறு - May Day History


மரம் தனது கனிகளால் அறியப்படும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 27-04-10


மரம் தனது கனிகளால் அறியப்படும்! அமைதியான இந்த வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் கள் ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித் துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒரு வரான தோழர் ஆல்பர்ட் ஆர்.பார்சன்ஸ், தன் மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதி யாக முழக்கமிட்ட வார்த்தை இது!8 மணி நேரம் வேலை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீது, காவல் துறையினரை நோக்கி குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்ச்சர், மைக்கேல் ஸ்வாஃப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்டது. ஆஸ்கர் நீபீ என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந் தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வாஃப் மற்றும் பீல்டன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர் கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஏங்கல், பிட்ச்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார்.இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அணி திரட்டியதுதான். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி யன்று சிகாகோ நகரில் 40000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக்கொண் டிருந்தார். அமைதியான முறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொலலப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர்.

காவல் துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்ட மிடப்பட்டு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஹே மார்கெட் என்ற பகுதியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரத்திலிருந்து வெளியாகும் “ஆர்பைட்டர் ஜேட்டங்” என்ற செய்தித்தாளில் ஆகஸ்டு ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டன கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந் தார். அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்ட னர். இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்த போது, ஜான்போன்பீல்டு என்ற அதிகாரி யின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும் படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந் தார். 70-க்கும்மேற்பட்டோர் காயமடைந்த னர். காவல்துறையினர் உடனடியாக துப் பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனைப் பேர் இறந்தனர், காய முற்றனர் என்பது இறுதிவரை தெரிவிக் கப்படவே இல்லை.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்க ளின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எறிந்தது தொழிலாளர் தலைவர்கள்தான் என குற்றம் சாட்டப்பட்டு, 8 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப் பற்றி அந்நகர மேயர் கூறுகையில், மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது கூட்டம். தொழிலாளர் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டி ருந்தனர். காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பார் சன் தனது இரு சிறிய குழந்தைகளையும் அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென் றிருந்தார். எனினும் தொழிலாளர் தலைவர் கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூட் டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல் பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகி யோர் மட்டும்தான். ஆனால் 8 தலை வர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்துரைத் தனர். தங்களின் உரிமைக்கான போராட் டத்தினை நசுக்கிடவே இந்த பொய்வழக்கு என எடுத்துரைத்தனர். அரசு வழக்குரை ஞரோ தலைவர்கள் பின்னால் ஆயிரக்க ணக்கில் தொழிலாளர்கள் திரண்டதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும், தலைவர் களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றத்தில் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஆகஸ்டு ஸ்பைஸ், இத்தகைய தீர்ப்புகளால் தொழி லாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது. எங்களுக்கு வழங் கப்பட்ட மரண தண்டனை தீப்பொறியாக கிளம்பி எங்கெங்கும் பரவி உரிமைக்கான போராட்டங்களாக கொழுந்துவிட்டெரியும் என முழக்கமிட்டார். 125 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கி வருகிறது.

கட்டுரையாளர், முன்னாள் மாநிலத் தலைவர், அரசு ஊழியர் சங்கம்

Thursday, June 24, 2010

மொழியின் அவசியம்


மொழிப்பற்று
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 25-06-10

தமிழ்ச்சான்றோர்கள் நிறைந்த அரங்கம். புலவர் பெருமக்கள் வாதம் புரிந்துகொண்டிருந்தனர். மொழிப்பற்று குறித்தே அன்றைய வாதத்தின் மையக் கருத்து அமைந்திருந்தது. தாய்மொழிப்பற்று ஆதிக்கம் குறித்து ஒரு சாராரும், அயல் மொழிகள் மோகம் குறித்து ஒரு சாராரும் வாதிட்டனர். தாய்மொழிப்பற்று குறித்து வாதிட்ட ஒரு புலவர், தனது தரப்பினை வலுப்படுத்த ஒரு கதையை கூறினார்.ஒரு நாள் சில மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் மரக்கலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றால் மரக்கலம் கவிழ்ந்தது. அதில் பயணித்துக்கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பல மணி நேரம் கடலில் நீந்தி ஒரு தீவினை அடைந்தனர். கரையை அடைந்த அவர்களை ஒரு காட்டுவாசி கும்பல் சூழ்ந்து வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்துச் சென்றது. அவர்களை அழைத்துச் சென்ற காட்டுவாசியினர், தங்கள் தலைவனின் முன்னால் மீனவர்களை கொண்டுபோய் நிறுத்தினர். மனிதக் கூட்டத்தை கண்ட அந்த காட்டுவாசிகளின் தலைவன் மகிழ்ந்து, இவர்கள் நமக்கு நல்ல விருந்தாவார்கள். இவர்களை அழைத்துப்போய் குகையில் அடையுங்கள். நல்ல உணவு கொடுத்து கொழுக்க வையுங்கள். வருகின்ற திருவிழா நாட்களில் தினம் ஒருவனை, நமது கிராமத்து மக்களுக்கு விருந்து படைக்கலாம் என்று கட்டளையிட்டான். அந்த காட்டுவாசிகள் மனிதர்களை உண்பவர்கள் என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

ஆடு, மாடுகளை அடைப்பது போல் அந்த மீனவர்கள் குகைக்குள் அடைக்கப்பட்டனர். தினசரி அவர்களுக்கு ஒருவன் உண்ண உணவினை கொண்டுவந்து கொடுத்தான். ஒருவன் அவர்களை ஓடைக்கு அழைத்துச் சென்று இயற்கை கடன்களை முடித்து குளிக்கவைத்து அழைத்து வந்தான். அவ்வாறு அந்த குகைக்குள் அவர்கள் வரும்போது காட்டுவாசிகள் தங்கள் மொழியில் உரையாடிக்கொண்டிருந்ததை ஒருவன் கேட்டு, சைகையின் மூலம் அவர்களிடம் உரையாட ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மொழியில் தனக்கு உயிர் பிச்சை கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சொல்வதற்கு தெரிந்துகொண்டான். நாட்கள் செல்லச் செல்ல அவன் காட்டுவாசிகளின் மொழியினை ஓரளவு பேச கற்றுக்கொண்டான்.
திருவிழாவும் வந்தது. தினம் ஒருவர் என பிடித்துவந்த மீனவர்களை அந்த காட்டுவாசியினர் விருந்து சமைத்து உண்டனர். ஒருநாள் காட்டுவாசிகளின் மொழி அறிந்தவனை விருந்து படைக்க இழுத்துச் சென்றனர். அவ்வாறு அவனை இழுத்துச் செல்லும்போது, அவன் காட்டுவாசி மொழியில் தனக்கு உயிர்பிச்சை கொடுக்க வேண்டும் எனவும், தன்னை பிழைக்க வைத்தால் காட்டுவாசிகளுக்கு தான் நன்றிவிசுவாசத்துடன் இருப்பேன் எனவும் காட்டுவாசி மொழியில் கத்தினான். அங்கு இருந்த காட்டுவாசிகளின் தலைவன் உள்பட அனைவரும் அவன் காட்டுவாசி மொழியில் பேசியதைக் கண்டு அதிசயித்துப்போயினர். காட்டுவாசிகளின் தலைவன், அவனைக் கொல்வதை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டான். எனது தாய்மொழியை இவன் கற்று அம்மொழியில் உயிர்பிச்சை கேட்கிறான். எனவே அவனை விடுதலை செய்யுங்கள். அவனுக்கு ஒரு மரக்கலம் கொடுத்து அனுப்பிவையுங்கள் என கட்டளையிட்டான்.
இந்தக் கதையை கூறிய புலவர், அந்த காட்டுவாசியின் தாய் மொழிப்பற்றினை ஆகவென புகழ்ந்து தள்ளினார். காட்டுமிராண்டிக்கும் தாய் மொழிப்பற்று இருக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது என தெளிவுபடுத்தினார். ஆனால் அடுத்து வந்த புலவரோ, இந்த கதைக்குள் இன்னொரு கதையும் இருக்கிறது. அதையும் இந்த தமிழ்மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட, அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அந்தப் புலவர், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மீனவன் கடுமையான காட்டுவாசிகளின் மொழியைக் கூட குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டான். ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் தேவைக்காக எந்த ஒரு மொழி பயன்படுகிறதோ அதை கற்றுக்கொள்வான் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது. மொழியின் வளர்ச்சி என்பது வளர்ந்து வரும் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். காலத்திற்கேற்ப எந்தவொரு மொழியும் செழுமைப்படுத்தப்பட வேண்டும். ஒரு மொழி அதன் வளர்ச்சிக்காக பிறமொழிகளில் சில வார்த்தைகளை ஈர்த்துக்கொள்வது இந்த அடிப்படையில்தான் என அந்தப் புலவர் தனது வாதத்தை எடுத்துரைத்தார்.
புலவரின் இந்த வாதத்தை தொடர்ந்து ஒரு நீண்ட மவுனம் அந்த அவையில் நிலவியது.

Wednesday, June 23, 2010

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு


பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதா?
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 18-6-10


மத்தியஅமைச்சரவை கூடி இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ‘ ஹிந்துஸ் காப்பர் நிறுவனங்களின் பங்குகளில் 10 விழுக்காட்டை விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை எடுத்த முடி வின் மூலம் மத்திய அரசிற்கு ரூ.16 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்த நிதி ஆண்டில் ரூ 4 ஆயிரம் கோடி நிதியினை பொதுத்துறைகளின் பங்கினை விற்பனை செய்வதின் மூலம் திரட்ட எடுத்த முடிவினடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தன் வசம் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் 10 விழுக்காட்டினை விற்பனை செய்யவும், ‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனத்தின் ௧௦ விழுக்காட்டு பங்குடன் மேலும் அந்த நிறுவனம் புதிதாக 10 விழுக்காட்டு பங்கினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும்போது பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விற்பனை பங்குகளில் 18 விழுக்காடு அந் நிறுவனத்திலும் அதன் எட்டு துணை நிறு வனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக் கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.தற்போது மத்திய அரசிற்கு நிலக்கரி நிறுவனத்தில் 100 விழுக்காடு பங்கு உள்ளது. அதன் மதிப்பு ரூ.6316.36 கோடி யாகும். அதில் 10 விழுக்காடு 63.16 கோடி ரூபாய் தற்போது விற்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இந்த பங்குகளின் சில்லறை விற்பனையில் 5 சதம் சலுகை தரவும் முடிவு செய்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (ஐசிஎல்) உலகத்திலேயே பெரிய நிலக்கரி நிறு வனம் ஆகும். கடந்த ஆண்டில் 431.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உற்பத்தி ஆகும்; நிலக்கரி மொத்த உற்பத்தி 531.5 மில்லியன் டன், இது 85 விழுக்காடு ஆகும்.‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனமும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது தனது உற்பத்தியை ஆண்டிற்கு 3.15 மில்லியன் டன்னிலிருந்து ௧௨ மில்லியன் டன்னாக உயர்த்திட திட்டமிட்டுள்து. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 4 ஆயிரம் கோடி திரட்டிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரிசாவில் உள்ள நால்கோ அலுமினிய உற்பத்தி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட, கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. பொன் முட்டையிடும் வாத்துகளின் கழுத்தை நெரித்திடும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தினை நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - சட்டமாகுமா ?


தடைகளும் விடைகளும்
-க.ராஜ்குமார் -
நன்றி - தீக்கதிர்-11-06-2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இருமுறை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருமித்தக் கருத்தினை எட்ட முடியவில்லை. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்குள்ளேயே இம்மசோதாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தாமதம் ஏன்?
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் சென்ற ஆண்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத்திய அரசுத் துறைகளில் பெண்களின் பங்கு வெறும் 7.5 சதவீதம் மட்டும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆட்சிப்பணிகளில் 24 சதவீதம், காவல் பணிகளில் 18 சத வீதம், அயல்நாட்டுப் பணிகளில் 18 சதவீ தம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் சமத்துவம் என்பது இல்லை என்பதே அவர் அளித்துள்ள புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நிலையான ஜனநாயக ஆட்சி தொடர்ச்சியாக இல்லாமல் உள்ள பாகிஸ்தானில் கூட, அரசு வேலைகளில் பெண்கள் 21 சதவீதம் என்பதும், நமது அண்டை நாடுகளான நேபாளத்தில் 30 சதவீதம், பங்களா தேஷில் 10 சதவீதம் என்பதும் நமக்கு கிடைத்திருக்கும் செய்திகளாகும். இந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக குரல் எழுப்பப்படுவதின் காரணத்தை புரிந்து கொள்ள முடியும்.
இந்திய நாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையானது, பதிவுகளின்படி 10 கோடிக்கும் மேல். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. இந்திய நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனையாக மாறியுள்ளது வேலையின்மை. இதற்குக் காரணம், இன்றைய ஆட்சியாளர்களின் தாராளமயக் கொள்கைகள்தான். இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சமதர்ம சமுதாயத் தை உருவாக்கிட போராடினால்தான் பெண்களுக்கான சமத்துவத்திற்கு வழி பிறக்கும். சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையுடன் இணைந்ததே பெண் களுக்கான விடுதலையாகும்.
இடஒதுக்கீடு மசோதா
கடந்த 14 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா 9.03.10 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகுக்கும் இந்த மசோதாவை மத்திய அரசு, மகளிர் தினமான 8.03.10 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது, வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் வன் முறையில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறினாலும், மக்களவையும், மொத்தம் உள்ள 28 சட்டமன்றங்களில், 15 சட்டமன்றங்கள் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால்தான் இது சட்டமாகும். காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் முணு முணுப்புகள் எழுந்துள்ளன. இத்தகைய எதிர்ப்பிற்கு என்ன காரணம்? அவர்களின் கோரிக்கைதான் என்ன?
ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வழங்கப்படவுள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டிற்குள் இதர பிற் படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இவர்கள் கோருகின்றனர். முதலில் 33 சதவீதம் மகளிருக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் உள் ஒதுக்கீடு போன்ற இதர விஷயங்களை சட்டமாக்கப்படும் போது விவாதிக்கலாம் என்பதே பிறரின் நிலைபாடு. கடந்த 14 ஆண்டுகாலமாக பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருபவர்களுக்கு ஒரு பொதுவான நோக்கம் உள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க அவர்கள் தயாராக இல்லை. பெண்களுக்கு 33 சதவீதம் தருவதற்கு தயாராக இல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமாகவே உள் ஒதுக்கீடு கேட்பவர்களின் போராட்டங்கள் உள்ளன. இந்த இடஒதுக் கீட்டிற்குள் மத ஒதுக்கீட்டை கேட்பவர்களுக்கு ஒரு உள்நோக்கம் இல்லாமல் இல்லை. ஓட்டுச்சீட்டு அரசியலில் ஒரு பிரச்சனையை அணுகினால் தீர்வு காண முடியாது என்பதை பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையின் மூலம் அறியலாம். சட்டம் கொண்டு வந்த பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என் பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது ஏன் என்பதை அவர்கள் விளக்கியே ஆக வேண்டும். உள் ஒதுக்கீடு தேவையற்றது என்று யாரும் சொல்லவில்லை. பசியுடன் காத்திருக்கும் ஒரு வீட்டில் சமையல் செய்ய முனையும்போது எந்த குழந்தைக்கு எவ்வளவு என்பதை முடிவு செய்து விட்டு சமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது போல் இன்று ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல் படுபவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. பெண்கள் இன்று சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த இட ஒதுக்கீடு மட்டும் அமையாது என்பதும், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை படைப்பதின் மூலமே விடுதலை காணமுடியும் என்பதால்தான் இடதுசாரிகள் இன்று இடஒதுக்கீட்டில் முதலில் 33 சதவீதம், பின்னர் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்று சொல்லி வருகின்றனர்.
சொத்தை வாதங்கள்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த ஒரு பிரச்சனையும் இந்த அளவிற்கு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சில முதலாளித்துவ செய்தித்தாள்கள் எதிராக எழுதி வருகின்றன. பெண்களுக்கு வழங்கப்படும் அதி காரம் ஆண்களிடம் பினாமியாக சென்று சேர்ந்துவிடும் என அவை வாதாடுகின்றன. தற்போது உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக் கீடு பயனளிக்கவில்லை என்பது அவைகளின் கருத்து ஆகும். பெண் பிரதிநிதிக ளின் கணவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர் என்பது அவர்களின் வாதம். எந்த ஒரு நடைமுறையும் ஆரம்ப காலத்தில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொள்வது வழக்கம். நாளடைவில் பெண்கள் இத்தகைய அமைப்பில் செயல்பட்டு வெற்றி பெறும்போது இத்தகைய வாதங்கள் காணாமல் போய்விடும். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படாமல், படிப்பதற்கு கூட உரிமை இல்லாதவளாக பெண் இருந்தாள். தேர்தல்களில் வாக்களிக்க உரிமையில்லாதவளாகவும் அவள் இருந்தாள். இன்று இத்தகைய உரிமைகளை போராடி பெற்று அவள் தவிர்க்க முடியாத தீர்மானகரமான சக்தியாக முன்னேறி வருகின்றாள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவளது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை நடைமுறை அனுபவங்கள் படிப்பறிவு இல்லாமல் கூட சிறந்த நிர்வாகியாக இல்லறத்தில் செயல்பட வைத்துள்ளது. இன்று அவள் பல பரிமாணங்களில் அறிவுத்திறன் பெற்றுள்ளாள். அப்படிப்பட்ட அடிப்படை குணாம்சத்தோடு அவள் அரசியல் அதிகாரத்திற்கு 33 சத வீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் தீர் மானகரமான சக்தியாக இடம்பெற்றால், இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் மிகச்சிறந்த வரவேற்கத்தக்க இரசாயன மாற்றம் ஏற்படும். இது இன்றுள்ள புரையோடிப் போன சூழலில் சுக வாசியாக உள்ளவர்களுக்கு சம்மட்டி அடியாக அமையும். எனவேதான் சகல வசதிகள் ஆடம்பரத்தை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரக்கூடிய ஒரு பகுதியும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திற் கும் எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிகாரபலம், ஆள்பலம், பண பலத்தினால் தண்டனைகளிலிருந்து தப்பியும் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் சில மனிதர்கள், பெண்களுக்கான, அல்ல அல்ல, சமூக முன்னேற்றத்திற்கான இம்மசோதாவை எதிர்க்கின்றனர்.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவேண்டுமென்றால் நாடு முழுவதும் அதற்கு ஆதரவான குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பை பறிக்கும் அரசின் ஆணை

வேலை வாய்ப்பை பறிக்கும் அரசின் ஆணை
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 12-01--10


கடந்த நான்கு ஆண்டுகாலமாக காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள், பணியிடங்கள் குறைப்பு என தொடர்ச்சியாக பல்வேறு ஆணைகளை பிறப்பித்து வந்த தமிழக அரசு, இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் அரசுப்பணியில் மறு நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் மட்டுமல்லாமல் அநேகமாக அனைத்து கட்சிகளும் இளைஞர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் வாய்ப்பு பறிபோகும் என அஞ்சுவதால் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆணை தேவைதானா?

இந்த ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை குறித்து அரசு விளக்கமளிக்கையில், தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட காலஅவகாசம் தேவைப்படுவதால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது சரியா? சரி என்றால் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை மட்டும்தானே தற்காலிகமாக நிரப்பிட வேண்டும். ஆனால் அரசு பிறப்பித்துள்ள ஆணையில் அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போது வகித்து வந்த பதவியைக்காட்டிலும் உயர் பதவியில் அவரை நியமிக்கக் கூடாது எனவும், ஆனால் அவர் வகித்த பதவியைக் காட்டிலும் கீழ் பதவியில் பணியில் நியமிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் பதவி உயர்வு அளிக்க வேண்டிய பணியிலும் கூட ஓய்வு பெற்றவர்களை நியமிக்க முடியும் என்பதுதானே உண்மை. இதனால் தற்போது பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்படும் அல்லவா. தகுதி வாய்ந்த அரசு ஊழியர்கள் இருக்கின்றபோது அத்தகைய பணியிடங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு தயங்குவது ஏன். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு பட்டியலுக்கு காலியிடங்களை நிர்ணயம் செய்திட அரசு நிபந்தனை விதித்திருந்ததால்தானே தற்போது தகுதியுள்ளவர்கள் இருந்தும் உயர் பதவிகளை நிரப்ப இயலவில்லை.

காலிப் பணியிடங்களை நிரப்பிட உள்ள அரசு விதி முறைகள்
இத்தககைய சூழ்நிலைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி நிர்வாகத்தை மேற் கொள்ள ஏற்கெனவே அரசு பணி விதிமுறைகள் உள்ளன. தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட தாமதம் ஆனால் விதி 10 (ஏ) (1)ஐ பயன்படுத்தி நியமன அலுவலர்கள் வேலை வாய்ப்பகத்தின் மூலம் முறையான காலமுறை ஊதியத்தின் அடிப்ப டையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட முடியும். அந்த விதி தற்போது ஏன் முடக்கப் பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு பட்டியல் போட தாமதம் ஆனால் விதி 39 (ஏ) பிரிவு களை பயன்படுத்தி தற்காலிக பதவி உயர்வு கொடுக்க முடியும். கடந்த காலங்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. இதை இப்போது மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது.

காலிப்பணியிடங்கள் கலைப்பு

சற்று கவனமாக பரிசீலித்தால் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறை அரசுப்பணியின் அடிப் படை கட்டமைப்பையே சிதைத்துவிட்டதை உணரமுடியும். தமிழ்நாட்டில் கடந்த 2001ல் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசுப் பணிக்கு நியமனம் செய்வதை தடை விதித்து அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து தொடர்ந்து இயக்கங்கள் நடைபெற்றன. இறுதியில் கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் இறுதிக்காலத் தில் அந்த தடையை முற்றிலும் நீக்கிவிட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலிப்பணி யிடங்களை நிரப்புவோம் என வாக்குறுதி தந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கையுடன் இன்றைய ஆட்சியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள் விதித்தனர். தேவையின் அடிப்படையில் அரசால் ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஓய்வு பெறுவதின் மூலமோ, பதவி உயர்வில் சென்றுவிடுவதின் மூலமோ, அரசு ஊழியர்கள் இறந்து விடுவதின் மூலமோ ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட நியமன அலுவலர்கள் மீண்டும் அரசின் அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டி அதை ஆய்வு செய்து கணிசமான பணியிடங்களை குறைத்து ஆணையிடும். இப்படி பல்வேறு துறைகளில் இந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அரசியல்சட்டம் மீறப்படுகிறதா?

இந்திய குடியரசின் அரசியல் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சட்டம் இயற்ற அரசியல் தலைவர்களுக்கு எப்படி அதிகாரம் கொடுத்துள்ளதோ, அதே போல் அந்த சட்டங்களை பாரபட்சமின்றி செயல்படுத்திட அரசு ஊழியர்களுக்கும் அதி காரம் கொடுத்துள்ளது. இதனால் தான் அரசுப் பணிக்கு ஆள் எடுக்கும் தனி அமைப்பாக அரசியல் சட்டம் தேர்வாணையங்களை உருவாக்கியுள்ளது. அரசு ஊழியர்கள் எந்த ஒரு ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் போன்று சுயாட்சி அதிகாரத்தை கொண்ட அமைப்புதான் தேர்வாணையங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடைபெற்ற மத்திய-மாநில தேர்வாணைய தலைவர்கள் மாநாட்டில், அரசுப்பணிக்கு பின்புற வழியாக பணி நியமனம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது எனவும், இத்தகைய நியமனங்களை தேர்வாணையங்கள் அங்கீகரிக்கக் கூடாது எனவும் வழிகாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய நியமனங் களுக்கு எதிராக பல்வேறு தீர்ப்புகள் பகரப்பட்டுள்ளன. எனினும் மத்திய-மாநில அரசுகள் இவைகளை கண்டுகொள்வதில்லை. இன்று தமிழக அரசில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற் பட்ட அலுவலர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இத்தகைய அரசின் நடவடிக்கைகள் காரணமாக இளைஞர்களின் மன நிலை பாதிக்கப்பட்டு மாற்று வழியில் திசை திரும்புகின்றன. அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அரசுப் பணிகளில் முறையான பணி நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு முன் வரவேண்டும். தற்போது அரசுப் பணியில் ஓய்வு பெற்றவர்களை நியம னம் செய்ய வழிவகுக்கும் ஆணையை ரத்து செய்ய முன்வர வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் 3000 உள்பட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுவே அரசின் இன்றைய உடனடி பணி ஆகும்.