தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, April 3, 2013

சமூகப்பணியில் ஓய்வூதியதாரர்கள்

-க.ராஜ்குமார்

நன்றி தீக்கதிர் நாள் 03-04-14

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என அழைக்கப்படு வது சரியா? நண்பர் ஒருவர் இந்த கேள் வியை எழுப்ப மற்ற நண்பர்கள் அப்படி அழைப்பது சரியல்ல என்றனர். அரசுஊழி யர்கள் என்றால் அவர்களை கட்டுப்படுத்த ஒழுங்கு நடத்தை விதிகள் உள்ளன. அரசின் கொள்கைகளுக் கெதிராக அவர்கள் பேச முடியாது. அரசின் நடவடிக்கைகளை விமர் சிக்க முடியாது. இப்படி ஏராளமான கட்டுப் பாடுகள் உள்ளன. அரசுஊழியர் ஓய்வு பெற்ற பின் இந்த கட்டுப்பாடுகள் எதுவும் அவரை கட்டுப்படுத்தாது. அவர் ஏனைய இந்திய குடி மக்களைப்போல் தனது கருத்தை சுதந்திர மாக வெளிப்படுத்த முடியும்.

ஓய்வுப் பெற்றவர்களில் பலர், தங்களுக்கு அரசுப் பணியில் கிடைத்த அனுபவங்களை அவர்கள் பணியாற்றிய துறைக்கு சம்பந்த மான நிறுவனங்கள் மற்றும் வணிக வளா கங்களில் பணியாற்றி அதன் மூலம் பலன டைந்து வருகின்றனர். அரசே ஓய்வு பெற்ற வர்களை மீண்டும் பணியில் அமர்த்த அர சாணை பிறப்பித்துள்ளது. இப்படி ஓய்வு பெற் றவர்கள் மீண்டும் மீண்டும் அரசுஊழியர்க ளாகவே இருக்க விரும்புகின்றனர். ஒரு சிலர் சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி யாற்றியும் வருகின்றனர்.



வழிகாட்டும் மையம்



அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் நினைத்தால் பொதுமக்களுக்கு பெருமளவில் உதவி செய்ய முடியும். அவர்களுக்கு கிடைத்துள்ள அனுபவங்களின் மூலம் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர் களுக்கு உதவி செய்ய முடியும். ஒவ்வொரு நகரத்திலும் இவர்கள் ஒரு வழிகாட்டும் மையத்தை உருவாக்கி அதன் மூலம் பணியாற்றி வரமுடியும்.
பல்வேறு சான்றுகள் பெறுவதற்காகவும், குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்காகவும், உதவித் தொகைகள் பெறுவதற்காகவும் வரும் சாதாரண மக்களுக்கு ஓய்வூதியர்கள் சரியான வழியினை காட்டி உதவ முடியும். நிர் வாக நடைமுறை தெரியாமல் வருகின்ற பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் படும் பாட்டை சொல்லி தீரமுடியாது. ஒரு சான்று பெற இவரைப்பார் அவரைப்பார் என நாள் முழுவதும் இழுத்தடிக்கப்பட்டு சான்று கிடைக்காமல் செல்லும் அப்பாவி மக்களுக்கு உதவ இவர்கள் முன்வரவேண்டும். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் தரகர்களிடமிருந்து மக்களை இவர்களால் மீட்க முடியும்.



தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டம், தலித் மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணத்தை செலுத்தும் திட்டம், சுகாதார மற்ற பணிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம், பல்வேறு கல்வி உதவித் தொகைகள், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, விவசாயத் தொழிலாளர் உதவி, உழவர் பாதுகாப்புத்திட்டம், இயற்கை இன்னல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், விபத்து நிவாரணம் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத்திட்டங்களின் பலன்களை தங்கு தடையின்றி மக்களுக்கு கொண்டு செல்ல ஓய்வூதியதாரர்களால் முடியும்.



எல்லாவற்றிற்கும் மேலாக, காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய மக்களுக்கு துணையாக இருக்க முடியும். இன்று நமது காவல் நிலையங்களுக்குள் செல்வது என்பதே சாதாரண மக்களால் இயலாத காரியமாக உள்ளது. அங்குள்ள காவல்துறை அதிகாரிகளின் மிரட்டல்களும் உருட்டல் களும் கண்டு தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, காவல் நிலையத்திற்குள் போகாமல் இருப்பதே மேல் என்ற முடிவுக்கு பலர் வந்து விட்டனர். புகார் கொடுத்தால் வாங்க மறுப்பது, எப்.ஐ.ஆர் போட மறுப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலைய அதிகாரியே நீதிபதிகளாக மாறுவது, தீர்ப்புகள் வழங்குவது, இவ்வளவு ஏன் அடித்து துன்புறுத்தி தண்டனையும் வழங்குவது என்றாகிவிட்டது. இப்படிப்பட்ட காவல் நிலையங்களில் சாதாரண மக்கள் எப்படி செல்ல முடியும். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் உதவி செய்ய முடியும். இந்த வகையில் ஓய்வூதியர்கள் வழிகாட்டும் மையம் ஒன்றை அமல்படுத்தி செயல்பட்டால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.



ஓய்வூதியர்கள் சுதந்திரமாக பணியாற்றும் வகையில் அரசும் இவர்களுக்கு இத்தகையப் பணிகளை மேற்கொள்ள, வழிகாட்டும் மையங்களை அமைத்துக்கொள்ள போதுமான உதவிகளை செய்வதோடு அனுமதியும் தர வேண்டும். தற்போது மாநில அரசு அலுவலகங்களில், ஒருசில மாவட்டங்களில், அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் எழுத, வழிகாட்ட சுயஉத விக்குழுக்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளலாம்.



தற்போது அரசுப்பணியில் உயர் பதவி வகித்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று சில ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் (ஓய்வூதியதாரர்கள்) எவ்வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என சட்டம் கொண்டு வரவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணமும் உண்டு. அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள் அந்த செல்வாக்கை பயன்படுத்திக்கொள் ளவும் வாய்ப்பு இருப்பதால் இப்படி கட்டுப்பாடு விதிக்காலம் என ஒரு யோசனையும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஓய்வுப் பெற்ற பல அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் இன்று பல்வேறு அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வரத்தான் செய்கின்றனர்.

அரசுப் பணியிலிருந்து மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் சொந்தமாக தொழில் செய்து வந்தவர்களும் ஒரு காலத்தில் (பொதுவாக 60 வயதில்) தங்கள் பணி களிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். இவர்கள் மூத்த குடிமக்கள் என அழைக்கப்படு கின்றனர். மேலை நாடுகளில் இன்றைய உலகை உருவாக்கியவர்களாக அவர்கள் மதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகள் அளித்து வருகின்றன. சமூகபாதுகாப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்படு கிறார்கள். அதே நேரம் திட்டமிடுதல், செயல் படுத்துதல் ஆகிய பணிகளில் இவர்களின் ஆலோசனைகளை அந்த நாடுகளில் உள்ள அரசுகள் பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சமூகபாதுகாப்புத்திட்டம்

இந்தியாவில் மூத்த குடிமக்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள், அரசுகளின் சுமை களாகவே கருதப்படுகின்றனர். இவர்களுக்கு ஓரிரு சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றினை பெறுவதற்கு அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களிடம் யாரும் ஆலோசனை கேட்க தயாராக இல்லை. வலுவான சமூக பாதுகாப்புத்திட்டம் இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது வருத்தப்பட வேண் டிய ஒன்றாகும். மத்திய அரசு 2012-ல் நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பித்துள்ள தேசிய சமூக பாதுகாப்புத் திட்டவரைவு மசோ தாவால், கோடிக்கணக்கான, அணி திரட்டப்படாத தொழிலாளர்களுக்கு ஒரு பலனும் இல்லை. மாறாக ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்றுவரும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிராகவும், ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையாகவே அது அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய பென்சன் திட்டத்திற்கு புதிய பெயரை சூட்டி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டமே தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம் ஆகும். மத்திய அரசின் இந்த சாகசத்திற்கு ஏமாந்து போன தொழிற்சங்கங்களும் உள்ளன.

மத்திய-மாநில அரசுகள் ஓய்வூதியதாரர்களைப்பற்றி, குறிப்பிடும்போது அரசுகளின் நிதிநிலைமைகள் பெரும்பாலும் இவர்களாலேயே பாதிக்கப்படுகின்றன என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. பணியாற்றும் ஊழியர்களைக் காட்டிலும் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை இன்னும் சிறிதுநாளில் அதிகரித்துவிடும் என்று புள்ளிவிபரங்களை வெளியிட்டு மக்களை பிரமிப்பூட்டி வருகின்றன. ஆனால் இவற்றில் சிறிதும் கூட உண்மை இல்லை. ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை கூடி வருவதைப்போல் தோற்றமளிப்பதற்கு காரணம். அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கையே ஆகும். காலிப்பணியிடங்களை மத்திய-மாநில அரசுகள் முறையாக நிரப்புவதில்லை என்ற உண்மையை அவைகள் மறைக்க முயற்சிக்கின்றன. 1982-ம் ஆண்டிலிருந்து மத்தியிலும் மாநிலத்திலும், காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசுகள் தடை விதித்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. இந்நிலையில் அரசுத்துறைகளில் பணியாற்று பவர்களின் எண்ணிக்கை எப்படி உயரும்?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

நிதி பற்றாக்குறைக்கு காரணம் அரசின் மெத்தனமே என்பது சமீபகால அனுபவமாக உள்ளது. அரசுகளுக்கு சேர வேண்டிய நிதி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருவதும் அம்பலமாகியுள்ளது. இக்கால கட்டத்தில், மத்திய அரசில் வெளிப்பட்டுள்ள ‘மெகா ஊழல்கள்’ அரசுக்கு வரவேண்டிய நிதி எங்கே போய்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. வங்கிகளில் வராக் கடன்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள வரிச்சலு கைகள் மூலமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை ஆண்டு தோறும் மத்திய அரசு இழந்து வருகிறது. இந்திய நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் போன்ற நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்புப் பணத் தின் மதிப்பு 400 லட்சம் கோடிக்கு மேல என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் 78 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை யாருடையது என்ற பட்டியலும் மத்திய அரசால் வெளி நாடுகளிலிருந்து பெறப்பட்டு, இந்திய நாட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இந்த பணத்தை மட்டும் கைப்பற்றி னால் மத்திய-மாநில அரசகளில்; பணியாற் றும், பணியாற்றிய ஊழியர்களுக்கு மட்டு மல்ல, கோடிக்கணக்கான, இந்திய நாட்டு மூத்த மக்களுக்கும், அணி திரட்டப்படாத தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் கொடுக்க முடியும், உருப்படியான சமூக பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க முடியும்