தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Saturday, October 26, 2013

ஒப்புதல் வாக்குமூலம்

மறைப்பதும் மறப்பதும் மார்க்சிஸ்ட்டுகள் அல்ல!
 நன்றி தீக்கதிர் 26-102013

தமிழருவி மணியன் அவர்கள், 25-10-13 தேதிய தினமணியில் தெரிவித்துள்ள கருத்துக்கள், மதச்சார்பற்ற கட்சிகளின் அணிச்சேர்க்கை அவரை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மார்க்சியர்கள் ஏதோ செய்யக் கூடாததை செய்துவிட்டதாக ஒரே அடியாக புலம்பித் தள்ளியுள்ளார். அவரது பதற்றத்தில், அவரை அறியாமல் பல விஷயங்கள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் மறைக்க நினைத்தாலும், மறக்க நினைத்தாலும் அவரது மனசாட்சி அதற்கு தயாராக இல்லை.எனவேதான் தனது கட்டுரையில், ‘குஜரத்தில் 2002-ல் நடந்த படுகொலைஎன்ற வார்த்தையை அவர், அவரை அறியாமலேயே திரும்ப, திரும்ப குறிப்பிட வேண்டியதாயிற்று. இந்த படுகொலைக்கு தலைமை தாங்கியவர், பின்பலமாக இருந்தவர் திருவாளர் மோடிதான் என்று, அம்மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் கூறியிருப்பதை ஏன் நண்பர் மணியன் மறைக்கப்பார்க்கிறார்?
பல்வேறு மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் உள்ள இந்திய நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க மோடி போன்ற, குறுகிய நோக்கங்கள் கொண்ட தலைவர்களுக்கு தகுதி இல்லை என்பது தெரியாதா?
பாபர் மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்புஎன்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பாஜகவிலிருந்து வெளியேறி முலாயம் சிங் கூட்டணிக்கு சென்றதை மேற்கோள் காட்டும் நண்பர் மணியன், இதன் மூலமாக, அவரை அறியாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த பாபர் மசூதி இடிப்புக்கு பின்னால் கல்யாண்சிங் மட்டும்தான் உள்ளாரா? பிஜேபி தலைவர்கள், அத்வானி, உமாபாரதி போன்ற வர்களுக்கு பங்கில்லையா? மசூதியை இடிக்கசங் பரிவார்’; கூட்டத்திற்கு உத்தரவு போட்டது ஆர்.எஸ்.எஸ் என்பதை நண்பர் மணியன் மறந்து விட்டாரா? இன்று அந்த ஆர்.எஸ்.எஸ். வேட்பாளராகத்தானே மோடி உருவெடுத்திருக்கிறார்? இதை நண்பர் மணியன் மறைக்கலாமா? மறக்கலாமா? இதற்கு அவரது மனசாட்சி இடம் தராது என்பதைதானே அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இப்போது பாஜக விடமிருந்து விலகி நிற்கிறது என்று அவர் ஆரூடம் சொல்லும்போதே, பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற செய்தியையும் நண்பர் மணியன் ஒப்புக்கொளள்ளத்தானே செய்கிறார்? மலினமான மக்கள் விரோத அரசை அகற்ற மார்க்சியர்கள் அமைக்கும் மூன்றாவது அணிஎன அவர் குறிப்பிடும் இடத்தில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசுடன், இந்த 5 ஆண்டுகாலம் இரகசியமாக கூட்டு வைத்து, பொருளாதார சீர்திருத்தம் என்று, வங்கிகளை சீரமைப்பது என்ற பெயரில் தனியார் மயமாக்கவும், காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கவும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதற்கும்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், மற்றும் பல மக்கள் விரோத மசோதாக்களை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் கையை தூக்கி உடந்தையாக இருந்த பாரதிய ஜனதா கட்சியை மக்களிடமிருந்து தப்பிக்க வைத்துவிடலாம் என்றால் முடியுமா 
இந்த காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக, பங்காரு இலட்சமணன், எடியூரப்பா, நிதின்கட்காரி போன்ற பிஜேபி தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் திளைத்துப்போய், கையும் களவுமாக பிடிபட்டு அம்பலப்பட்டு போயிருப்பதை நண்பர் மணியன் மறைக்கப் பார்க்கிறாரா? இவர் வக்காலத்து வாங்கும் திருவாளர் மோடி ஆட்சிசெய்யும் குஜராத்தில் நடைபெற்று வருகின்ற ஊழல் பட்டியல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதே? இதற்கு அவர் என்ன செய்யப் போகிறார்?மதச்சார்பற்ற கட்சிகளின் அணிச் சேர்க்கை தவிர்க்க முடியாதது.
காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகளை, அவர் களின் செயல்பாடுகள் காரணமாக, இந்திய மக்கள் நிராகரிக்க முடிவு செய்து விட்டனர். ஆங்காங்கே உள்ள மாநிலக் கட்சிகளே மக்கள் முன் சரியான மாற்றாக பார்க்க முடிகிறது. இதன் வெளிப் பாடே ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட் டணியும் சிதைந்து வருவதும், இவ்விரு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்த பல்வேறு மாநிலக் கட்சிகள் வெளியேறுவதுமாக உள்ளன. இவற்றையெல்லாம் மறந்து விட்டு, மறைத்துவிட்டு நண்பர் மணியன் மார்க்சியர்களை விளாசி தள்ளுகிறார்.
மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் மக்கள் விரோத நடவடிக்கைகளே காரணம் என்பதை அவர் சொல்ல தயாராக இல்லை. காங்கிரஸை விமர்சிக்க துணிவுள்ள அவருடைய எழுதுகோலுக்கு பிஜேபியை விமர்சிக்கத் துணிவில்லை; திராணி இல்லை.தேர்தலுக்கு முன் மூன்றாவது அணி இல்லை என்பதை இடதுசாரிகளும், மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் திரும்ப திரும்ப சொன்னப்பிறகும் மூன்றாவது அணி குறித்து திரு மணியன் அச்சப்படுவது, தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் மாநி லக்கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸ்- பிஜேபிக்கு மாற்றாக ஒரு கூட்டணி ஆட்சி அமையும் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ள காரணத்தினாலேயே அவருக்கு இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் தூக்கி பிடித்துள்ள, பிரதமர் நாற்காலி மீது ஆசை வைத்துள்ள மோடியை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற முடிவிற்கு நண்பர் மணியன் வந்து விட்டதாலேயே அவர் அச்சப்படுகிறார்.
இந்திய நாட்டின் பிரதமர் பதவியே மாhக்சிஸ்ட்டுகளை தேடிவந்து, காத்துக்கொண்டிருந்தபோது அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக் கூடிய துணிவு மிக்கவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். எந்த அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தாலும் கிடைக்கும் என்ற நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு தந்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் நினைத் திருந்தால் அமைச்சரவை பதவி மட்டுமல்ல பல மாநிலங்களின் ஆளுநர்களாகக் கூட சென்றிருக்க முடியும். ஆனால் குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் இன்று கிராம மக்களின் உயிர் மூச்சாக உள்ள, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கியவர்கள் மார்க்சியர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மீது அவதூறு எழுத நண்பர் மணியனுக்கு எப்படி துணிவு வந்ததோ?
காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த இரு கட்சிகளின் கூட் டணி கூடாரங்களிலிருந்தும் பல கட்சிகள் ஏற்கனவே வெளி யேறிவிட்டன. இதன் காரணமாக மாநிலக்கட்சிகள் வலுப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிவர். இன்றைய இந்திய அரசியல் போக்கு தவிர்க்க முடியாதது என்பதும், இதில் சில மாநிலக் கட்சிகளிடம் தடுமாற்றம் இருக்கும் என்பதும் அறிந்ததே. இதை காங்கிரசும் பிஜேபியும் மீண்டும் பயன்படுத்திக்கொண்டு மக்களை சுரண் டும் ஆட்சியை அமைத்துவிடக்கூடாது என்பதற்காகவே மார்க் சிஸ்ட்டுகளின் இன்றைய செயல்பாடு என்பதை மணியன் அறியாவிட்டாலும் மக்கள் அறிவர்.

ஏனெனில் மார்க்சிஸ்ட்டுகள் மறக்க கூடியவர்களும் அல்ல மறைப்பவர்களும் அல்ல என்பது அவர்களுக்கு தெரியும்.