தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, April 30, 2014

தீக்கதிர்
நாள்  01-05-2014
மரம் தனது கனிகளால் அறியப்படும்!


மரம் தனது கனிகளால் அறியப்படும்! அமைதியான இந்த வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர்கள், தங்களின் உரிமைகளுக்காக ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித்துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒருவரான தோழர் ஆல்பர்ட் ஆர்.பார்சன்ஸ், தன் மீது பொய்யாக, சுமத்தப்பட்ட கொலைக்குற்றத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதியாக முழக்கமிட்ட முழக்கமிது!8 மணி நேரம் வேலை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீதும் காவல் துறையினர் மீதும் குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்ச்சர், மைக்கேல் ஸ்வாஃப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆஸ்கர் நீபீ என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வாஃப் மற்றும் பீல்டன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஏங்கல், பிட்ச்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி யன்று தூக்கிலிடப்பட்டனர்.
லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்.இவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அவர்களை அணி திரட்டியதுதான். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் உறார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக்கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.
ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். காவல் துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஹே மார்க்கெட் என்ற பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரத்திலிருந்து வெளியாகும் “ஆர்பைட்டர் ஜெட்டங்” என்ற செய்தித்தாளில் ஆகஸ்டு ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டனக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந்தார். அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டனர்.
இக் கூட்டத்தில் தொழிலாளர்கள் தலைவர்கள் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆல்பர்ட் பார்ஸன்ஸ் சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதிக் கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன்பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல்துறையினர் உடனடியாக துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனைப் பேர் இறந்தனர் காயமுற்றனர் என்பது இறுதிவரை தெரிவிக்கப்படவே இல்லை.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எறிந்தது தொழிலாளர் தலைவர்கள்தான் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு 8 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப் பற்றி அந்நகர மேயர் கூறுகையில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டம். தொழிலாளர் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டிருந்தனர். காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார்.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பார்சன் தனது இரு சிறிய குழந்தைகளையும் அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். எனினும் தொழிலாளர்கள் தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆல்பர்ட் பார்ஸன்ஸ் சாமுவேல் பீல்டன் ஆகியோர் மட்டும்தான். ஆனால் 8 தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்துரைத்தனர். தங்களின் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்கிடவே இந்த பொய்வழக்கு என எடுத்துரைத்தனர்.

அரசு வழக்குரைஞரோ தலைவர்கள் தங்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களை திரட்டியதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும், தலைவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றத்தில் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட பின், ஆகஸ்டு ஸ்பைஸ், இத்தகைய தீர்ப்புகளால் உலகத் தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது, எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனை தீப்பொறியாக கிளம்பி உலகமெங்கெங்கும் பரவி, உரிமைகளுக்கான போராட்டங்களாக மாறி கொழுந்துவிட்டெறியும் என முழக்கமிட்டார். 128 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கி வருகிறது.- க.ராஜ்குமார்

Sunday, January 26, 2014

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
க. ராஜ்குமார் 
நன்றி தீக்கதிர் 22-01-2014

காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி பிஜேபி பிரச்சாரம் செய்து வருகின்றது. ஊழல் புரிவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. காங்கிரசுக்கு ஊழல் புரிவதில் பாரம்பரியம் உள்ளதுபோல் பிஜேபிக்கும் உண்டு. வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது ஆயுதபேர ஊழலில், உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்க பார்க்க கட்டு கட்டாக பணத்தை வாங்கி வைத்து சிக்கிய பிஜேபி தலைவர் பங்காரு இலட்சுமணன், மற்றொரு முன்னாள் தலைவர் நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி நிறுவனத்தோடு தொடர்புடைய 30 நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக விசாரிக்க வருமானவரித்துறை நிதினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்னகத்தில் பிஜேபி தடம்பதிக்க காரணமானவர் என்று சொல்லப்படுகின்ற எடியூரப்பா கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த போது, சுரங்க உழல் மற்றும் நில ஊழல்களில் சிக்கி வழக்கை சந்தித்து கொண்டிருப்பதும், கட்சியிலிருந்து விலகிய அவர் மீண்டும் மோடி தலைமையில் இந்தியாவில் ஊழலை ஒழிக்க பிஜேபியில் இணைந்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. குஜராத்தில் மோடி அமைச்சரவையில் இருந்து பாபு பொக்கிரியா. 54 கோடி லைம் ஸ்டோன் வழக்கில் சிக்கி தண்டிக்கப்பட்டவர். இப்படி ஊழலோ ஊழல் என காங்கிரசுக்கு சற்றும் சளைத்தது அல்ல பிஜேபி.அது மட்டுமல்ல, 2001ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை நாடாளுமன்றத்தில் பாதுகாத்து, 10 ஆண்டுகள் கழித்து பிஜேபியின் தயவுடன்தான் காங்கிரஸ் அதை சட்டமாக்கியது. அதே போல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முதன் முதலில் வழிவகுத்தது பிஜேபிதான். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இதற்கான வித்தை விதைத்தார். காப்பிட்டுத்துறையில் அன்னிய மூலதனம், வங்கிகளில் தனியார் மயம் இதில் காங்கிரசுக்கு கைகொடுத்தது பிஜேபி. கடந்த 5 ஆண்டுகாலமாக இவ்விரு கட்சிகளும் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றின. காங்கிரசும் பிஜேபியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.-