தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Sunday, January 26, 2014

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
க. ராஜ்குமார் 
நன்றி தீக்கதிர் 22-01-2014

காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி பிஜேபி பிரச்சாரம் செய்து வருகின்றது. ஊழல் புரிவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. காங்கிரசுக்கு ஊழல் புரிவதில் பாரம்பரியம் உள்ளதுபோல் பிஜேபிக்கும் உண்டு. வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது ஆயுதபேர ஊழலில், உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்க பார்க்க கட்டு கட்டாக பணத்தை வாங்கி வைத்து சிக்கிய பிஜேபி தலைவர் பங்காரு இலட்சுமணன், மற்றொரு முன்னாள் தலைவர் நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி நிறுவனத்தோடு தொடர்புடைய 30 நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக விசாரிக்க வருமானவரித்துறை நிதினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்னகத்தில் பிஜேபி தடம்பதிக்க காரணமானவர் என்று சொல்லப்படுகின்ற எடியூரப்பா கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த போது, சுரங்க உழல் மற்றும் நில ஊழல்களில் சிக்கி வழக்கை சந்தித்து கொண்டிருப்பதும், கட்சியிலிருந்து விலகிய அவர் மீண்டும் மோடி தலைமையில் இந்தியாவில் ஊழலை ஒழிக்க பிஜேபியில் இணைந்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. குஜராத்தில் மோடி அமைச்சரவையில் இருந்து பாபு பொக்கிரியா. 54 கோடி லைம் ஸ்டோன் வழக்கில் சிக்கி தண்டிக்கப்பட்டவர். இப்படி ஊழலோ ஊழல் என காங்கிரசுக்கு சற்றும் சளைத்தது அல்ல பிஜேபி.அது மட்டுமல்ல, 2001ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை நாடாளுமன்றத்தில் பாதுகாத்து, 10 ஆண்டுகள் கழித்து பிஜேபியின் தயவுடன்தான் காங்கிரஸ் அதை சட்டமாக்கியது. அதே போல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முதன் முதலில் வழிவகுத்தது பிஜேபிதான். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இதற்கான வித்தை விதைத்தார். காப்பிட்டுத்துறையில் அன்னிய மூலதனம், வங்கிகளில் தனியார் மயம் இதில் காங்கிரசுக்கு கைகொடுத்தது பிஜேபி. கடந்த 5 ஆண்டுகாலமாக இவ்விரு கட்சிகளும் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றின. காங்கிரசும் பிஜேபியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.-