மொழிப்பற்று
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 25-06-10
தமிழ்ச்சான்றோர்கள் நிறைந்த அரங்கம். புலவர் பெருமக்கள் வாதம் புரிந்துகொண்டிருந்தனர். மொழிப்பற்று குறித்தே அன்றைய வாதத்தின் மையக் கருத்து அமைந்திருந்தது. தாய்மொழிப்பற்று ஆதிக்கம் குறித்து ஒரு சாராரும், அயல் மொழிகள் மோகம் குறித்து ஒரு சாராரும் வாதிட்டனர். தாய்மொழிப்பற்று குறித்து வாதிட்ட ஒரு புலவர், தனது தரப்பினை வலுப்படுத்த ஒரு கதையை கூறினார்.ஒரு நாள் சில மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் மரக்கலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றால் மரக்கலம் கவிழ்ந்தது. அதில் பயணித்துக்கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பல மணி நேரம் கடலில் நீந்தி ஒரு தீவினை அடைந்தனர். கரையை அடைந்த அவர்களை ஒரு காட்டுவாசி கும்பல் சூழ்ந்து வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்துச் சென்றது. அவர்களை அழைத்துச் சென்ற காட்டுவாசியினர், தங்கள் தலைவனின் முன்னால் மீனவர்களை கொண்டுபோய் நிறுத்தினர். மனிதக் கூட்டத்தை கண்ட அந்த காட்டுவாசிகளின் தலைவன் மகிழ்ந்து, இவர்கள் நமக்கு நல்ல விருந்தாவார்கள். இவர்களை அழைத்துப்போய் குகையில் அடையுங்கள். நல்ல உணவு கொடுத்து கொழுக்க வையுங்கள். வருகின்ற திருவிழா நாட்களில் தினம் ஒருவனை, நமது கிராமத்து மக்களுக்கு விருந்து படைக்கலாம் என்று கட்டளையிட்டான். அந்த காட்டுவாசிகள் மனிதர்களை உண்பவர்கள் என்று அப்பொழுதுதான் தெரிந்தது.
ஆடு, மாடுகளை அடைப்பது போல் அந்த மீனவர்கள் குகைக்குள் அடைக்கப்பட்டனர். தினசரி அவர்களுக்கு ஒருவன் உண்ண உணவினை கொண்டுவந்து கொடுத்தான். ஒருவன் அவர்களை ஓடைக்கு அழைத்துச் சென்று இயற்கை கடன்களை முடித்து குளிக்கவைத்து அழைத்து வந்தான். அவ்வாறு அந்த குகைக்குள் அவர்கள் வரும்போது காட்டுவாசிகள் தங்கள் மொழியில் உரையாடிக்கொண்டிருந்ததை ஒருவன் கேட்டு, சைகையின் மூலம் அவர்களிடம் உரையாட ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மொழியில் தனக்கு உயிர் பிச்சை கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சொல்வதற்கு தெரிந்துகொண்டான். நாட்கள் செல்லச் செல்ல அவன் காட்டுவாசிகளின் மொழியினை ஓரளவு பேச கற்றுக்கொண்டான்.
திருவிழாவும் வந்தது. தினம் ஒருவர் என பிடித்துவந்த மீனவர்களை அந்த காட்டுவாசியினர் விருந்து சமைத்து உண்டனர். ஒருநாள் காட்டுவாசிகளின் மொழி அறிந்தவனை விருந்து படைக்க இழுத்துச் சென்றனர். அவ்வாறு அவனை இழுத்துச் செல்லும்போது, அவன் காட்டுவாசி மொழியில் தனக்கு உயிர்பிச்சை கொடுக்க வேண்டும் எனவும், தன்னை பிழைக்க வைத்தால் காட்டுவாசிகளுக்கு தான் நன்றிவிசுவாசத்துடன் இருப்பேன் எனவும் காட்டுவாசி மொழியில் கத்தினான். அங்கு இருந்த காட்டுவாசிகளின் தலைவன் உள்பட அனைவரும் அவன் காட்டுவாசி மொழியில் பேசியதைக் கண்டு அதிசயித்துப்போயினர். காட்டுவாசிகளின் தலைவன், அவனைக் கொல்வதை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டான். எனது தாய்மொழியை இவன் கற்று அம்மொழியில் உயிர்பிச்சை கேட்கிறான். எனவே அவனை விடுதலை செய்யுங்கள். அவனுக்கு ஒரு மரக்கலம் கொடுத்து அனுப்பிவையுங்கள் என கட்டளையிட்டான்.
இந்தக் கதையை கூறிய புலவர், அந்த காட்டுவாசியின் தாய் மொழிப்பற்றினை ஆகவென புகழ்ந்து தள்ளினார். காட்டுமிராண்டிக்கும் தாய் மொழிப்பற்று இருக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது என தெளிவுபடுத்தினார். ஆனால் அடுத்து வந்த புலவரோ, இந்த கதைக்குள் இன்னொரு கதையும் இருக்கிறது. அதையும் இந்த தமிழ்மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட, அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அந்தப் புலவர், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மீனவன் கடுமையான காட்டுவாசிகளின் மொழியைக் கூட குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டான். ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் தேவைக்காக எந்த ஒரு மொழி பயன்படுகிறதோ அதை கற்றுக்கொள்வான் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது. மொழியின் வளர்ச்சி என்பது வளர்ந்து வரும் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். காலத்திற்கேற்ப எந்தவொரு மொழியும் செழுமைப்படுத்தப்பட வேண்டும். ஒரு மொழி அதன் வளர்ச்சிக்காக பிறமொழிகளில் சில வார்த்தைகளை ஈர்த்துக்கொள்வது இந்த அடிப்படையில்தான் என அந்தப் புலவர் தனது வாதத்தை எடுத்துரைத்தார்.
புலவரின் இந்த வாதத்தை தொடர்ந்து ஒரு நீண்ட மவுனம் அந்த அவையில் நிலவியது.
No comments:
Post a Comment