தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, June 30, 2010

பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் ஏன் ?

விலை உயர்வும்! விளம்பரம் சொல்லும் உண்மையும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 30-06-10

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், கடந்த 25.06.2010 அன்று கூடிய அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், மண்ணெண் ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 எனவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 எனவும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இனி பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளவும்; தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தனியார் கையில் போய் சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தபோது நினைத்தவாறு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்துவிட்டது.


பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வினை தொடர்ந்து, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் அண்டை நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையுடன் இந்திய நாட்டில் (தில்லி) உள்ள விலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய விளம்பரம் வெளியிடுவது மத்திய அரசில் இதுவே முதல் முறை என்றாலும், தமிழ்நாட்டில் இது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும். போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துகின்ற நேரங்களில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகும். மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ள விளம்பரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எரிபொருள்களின் விலை விபரம் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்று சொல்லவருகிறது மத்திய அரசு. இ;ந்த விளம்பரத்தில் கியாஸ் சிலின்டர் ஒன்றிற்கு அரசு ரூ.225 மானியமும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12-ம் மானியமும் வழங்குவதாகவும் இதனால் ஆண்டொன்றிற்கு மத்திய அரசிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என கணக்கு காட்டியுள்ளது. இந்திய நாட்டில் 11 கோடியே 50 லட்சம் குடும்பங் கள் சமையல் எரிவாயுவினை பயன் படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் 94 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் ஏழை-எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விபரங்களும் அதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .
இந்திய நாட்டின் ஜனத்தொகையில் 50 விழுக்காடு மக்களுக்கு ஆண்டொன்றிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குவதை சுமையாக விளம்பரப்படுத்தியுள்ள மத்திய அரசு, சென்ற ஆண்டு ஒரே ஒரு நபருக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இதே அளவு தொகையை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. அம்பானி குடும்பத்தினரை காப்பாற்ற துடிக்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களை சுமையாக கருதுவது ஏன்?மத்திய அரசு, சுட்டிக்காட்டியுள்ள நாடுகளின் எண்ணெய் சந்தையுடன் இந்திய நாட்டு எண்ணெய் சந்தையை ஒப்பிட்டு நோக்கினால், அந்நாடுகளின் ஒட்டுமொத்த சந்தையை காட்டிலும் இந்திய எண்ணெய் சந்தை மிகப்பெரியது. மேலும் இந்த நான்கு நாடுகளிலும் உள்நாட்டு பிரச்சனைகளால் ஒரு நிலையற்றத்தன்மை நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாடுகளுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க மத்திய அரசு முனைவது விந்தையானது.
கூட்டணிக் கட்சிகளின் கடமை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகள், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விலை உயர்வு முடிவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முடிவாக இருந்தாலும் அவைகளை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதரிப்பதும், இந்த முடிவுகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், மத்திய அரசிற்கு முடிவினை மறுபரிசீலனை செய்ய கடிதம் எழுதுவதும் விந்தையானது. இக்கட்சிகள் மேற்கொண்டு வரும் இரட்டை நிலைபாட்டினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது உடனடி வேலையாகும். தற்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கு அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த குரலில் ஒப்புதல் தந்துள்ளனர். தமிழக முதல்வரோ பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பற்றி குறிப்பிடுகையில், தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களை முழுமையாக புறக்கணிக்காமல், உத்தேசித்திருந்த விலை உயர்வைவிட ஓரளவு குறைத்தே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆறுதல் கூறியுள்ளார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விலை ஏற்றத்தில் ஒரு ஆதாயமும் உண்டு. எரிபொருள்களின் மீது மாநில அரசுகள் விதித்துவரும் வரி வருமானம் உயரவும் செய்வதால், இந்த கட்சிகள் எரிபொருள்களின் விலை ஏறும்போது கண்டும் காணாமல் இருக்கின்றன. கடந்த முறை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் தடுத்துவந்தனர் என்பதை மக்கள் அறிவர். ஆனால் இன்றோ பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த இனி அமைச்சரவைக் குழுக் கூட கூட வேண்டியதில்லை. எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களே விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கிவிட்டது.

No comments:

Post a Comment